உயிரிழை அமைப்பின் தொழிற்பயிற்சி கட்டடம் பிரமாண்டமாக திறப்பு விழாவிற்கு தயாராகின்றது!!

462

 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிபுற்றோர் அமைப்பு தன் பணிகளை விரிவாக்கி செயற்பட ஏ 9 வீதி மாங்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் வெறும் 2 மாதங்களிலேயே முடிவடைந்து 30.03.2017 பிரமாண்டமாக திறந்து வைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான முழுப்பொறுப்பை கனடா வாழ் ஈழ உறவுகளும் ஏனைய நல்லுள்ளம் கொண்ட உறவுகளும் ஏற்றிருந்தனர். கனடா பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினரும் பிரம்ரன் தமிழ் முதியோர் அமைப்பினரும் கனடா உறவுகளான V.அஜந்தன் , S.துசிதா , தாஸ் கதிரமலை ஆகியோரும் சுவிஸ் வலே தமிழ்சங்கம் , பிரான்ஸ் ஈழவர் இணைந்து இதற்கு தேவையான 55 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை திரட்டி வழங்கியுள்ளனர். இதற்காக பங்களிப்பு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களின் ஆதரவுக்கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கழுத்துக்கு கீழே இடுப்புக்கு கீழே இயக்கம் அற்றவர்கள் இவ்வமைப்பால் பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்தைதீவு வவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பாளர்களைக் கொண்டு அவ்வாறு பாதிப்புற்றுள்ளோரை இவ்வமைப்பு தனது கவனப்பிற்குள் கொண்டுவந்து அவர்களுக்கான செயற்திட்டங்களான சிறுதுளி செயற்திட்டம் , நம்பிக்கை செயற்திட்டம் , மாணவர்களுக்கான கல்வி செயற்திட்டம் என்று பல்வேறு செயற்திட்டங்களை புலம்பெயர் உறவுகள் அமைக்கள் இடம் இருந்து உதவிகளை பெற்று சிறப்பாக செயற்படுத்தி வருகின்றனர் இச்செயற்பாடுகளை இணைக்கும்

தலைமையகமாகவும் பாதிப்புற்றோருக்கான சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல் முதல் கொண்டு பல்வேறு நலத் திட்டங்கள் இங்கிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

கட்டிடம் தயாராகியுள்ள நிலையில் தொழில் பயிற்சி உபகரணங்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் பாடநெறிகளைத் தயாரித்தல் போன்றவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மேலதிக நிதியை தமிழ் நலனில் அக்கறையுள்ள தமிழ் உறவுகள் அனைவரும் தந்துதவுவார்கள் என்றும் இப்பணியை விரைந்து முடிக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாக உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பினர் தெரிவித்தனர்.

இதற்கான பணியை அனைவரிடமும் கேட்டு இருப்பதாக தெரியப்படுத்தினார்கள். இப்புனிதப்பணியில் தம்மையும் இணைத்து பங்களிப்பு செய்ய விரும்பும் நல் உள்ளம் கொணடவர்கள் அனைவரையும் உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்தொடு 30.03.2017 காலை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.தொடர்புக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0213900202, 0774761192அல்லது மின்அஞ்சல் [email protected]