வவுனியாவை வந்தடைந்தது மன்னார் பக்தர்களின் பாதயாத்திரை!!

318

 
கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து மன்னாரிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வவுனியாவை வந்தடைந்தனர்.

கிறிஸ்தவர்கள் தற்பொழுது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு வவுனியா கோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியில் நாளை வெள்ளிக்கிழமை (24.03.2017) நடைபெற இருக்கும் சமய வழிபாட்டில் கலந்து கொள்ளும்முகமாக மன்னார் பகுதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக இன்று (23.03.2017) மாலை 5 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தனர்.

கடந்த புதன்கிழமை (22.03.2017) அதிகாலை மன்னார் பேராலயத்தில் ஒன்றுகூடி பேராலய பங்குதந்தை அருட்பணி பெப்பி சோசை அடிகளாரால் நடாத்தப்பட்ட வழிபாட்டில் கலந்து கொண்டு அவரிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டபின் சிலுவை சுமந்தவர்களாக தலைமன்னார் மதவாச்சி வீதியினூடாக வவுனியாவிற்கு தங்கள் பாதயாத்திரியை ஆரம்பித்த பக்தர்கள் இன்று (23.03.2017) மாலை 5 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புதிய அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தனர்

இவர்கள் வெள்ளிக்கிழமை காலை (24.03.2017) வவுனியாவில் அமைந்துள்ள கல்வாரியை சென்றடைந்து அன்று அங்கு நடைபெறும் சிலுவைப் பாதை மற்றும் திருப்பலியிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் செல்லும் வழிகளில் வவுனியா பிரதேச செயலகம் உட்பட பல அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் தாக சாந்திக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிசாரும் இவர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் , இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் என இணைந்து பக்தர்களுக்காக தங்குமிடவசதி, இரவு உணவுகள் என்பனவற்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.