அரசை எதிர்த்து இந்தோனேசிய விவசாயிகள் வித்தியாசமான போராட்டம்!!

313

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், விவசாயிகள் சிலர் கால்களில் சீமந்தைப் பூசிக்கொண்டு வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

மத்திய ஜாவா பகுதியில் உள்ள கென்டங் என்ற மலைக் கிராமத்தில் வாழும் விவசாயிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கென்டங் மலை அமைந்திருக்கும் ரெம்பாங் பிரதேசத்தில், அரசுக்குச் சொந்தமான ‘பி.டி. செமேன் இந்தோனேசியா’ என்ற சீமந்து தொழிற்சாலை இயங்க இந்தோனேசிய அரசு அனுமதியளித்துள்ளது. குறித்த சீமந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டால், கென்டங் மலையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மாசடையும் என்றும், அந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் போகும் என்று கூறியே விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சீமந்து தொழிற்சாலையால் தமது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர்த்த, மரப் பெட்டிகளில் தம் கால்களை வைத்து அவற்றின் மேல் சீமந்தை ஊற்றி போராடி வருகிறார்கள் இந்த விவசாயிகள். சீமந்து பூசப்பட்ட தமது கால்களுக்கு என்ன நிலை நேருமோ, அதுதான் தம் எதிர்கால சந்ததியினருக்கும் நேரும் என்று அவர்கள் தமது போராட்டத்துக்கு விளக்கமளித்துள்ளனர்.

பண்டைய ஜாவா பாரம்பரியத்தை ஒட்டிய இவர்களுக்கு ஆதரவாக இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த ஜாவா இனத்தவரும் ஒன்று கூடிப் போராடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.