கம்போடிய தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கும் அமெரிக்க நிறுவனம்!!

254

ஆசியாவிலேயே ஏழ்மையான நாடான கம்போடியாவில் உள்ள தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி அதை அமெரிக்காவில் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு யுனிசெஃப் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அம்ப்ரோஸியா லேப்ஸ் எனும் நிறுவனம், கம்போடியா தலைநகர் நாம்பெனில் கிளை அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

நாம்பெனின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் அந்த நகரையும், சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி, அதனைப் பதப்படுத்தி வருகிறது.

அந்தப் பால் பிறகு போத்தல்களில் அடைக்கப்பட்டு, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தாய்மார்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பெறப்பட்ட தாய்ப்பால், 5 அவுன்ஸ் (147 மிலி) கொண்ட போத்தல் 20 டொலருக்கு அதாவது சுமார் மூவாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அம்ரோஸியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைபாடு அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் கம்போடியக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிற உடலுறுப்புகள் மற்றும் இரத்த விற்பனையைப் போல, தாய்ப்பால் விற்பனையையும் சட்டவிரோதமாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதனால் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு தாற்காலிகத் தடை விதித்துள்ளதாகவும் கம்போடிய அரசு அறிவித்துள்ளது