தமிழர்களுக்கு தீர்வு தந்தால் அரசு தப்பிக்கலாம் : சம்பந்தன்!!

465

sambanthan

இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன தொடர்ந்து இலங்கைக்கு தொந்தரவு கொடுக்கின்றன, ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றப் பொதுச்சபை உரையில் குறிப்பிட்டதை ஏற்கமுடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தன் இலங்கையில் போர் முடிந்து நான்காண்டுகளாகியும், தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.

அரசுக்கு, இந்தப் போரின் போது பல்வேறு நாடுகள் உதவின, போரின் போதும், போருக்குப் பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ இந்த நாடுகளுக்கும் ஐநா மன்றத்துக்கும் பல்வேறு உறுதிமொழிகளைத் தந்தார். இவை நிறைவேற்றப்படவில்லை என்றார் சம்பந்தன்.



மேலும் மனித உரிமைகள் குறித்த பிரச்சினையில் இன்னும் ஒரு நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன இதையும் சர்வதேச சமூகம் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை என்று மஹிந்த கூறியதற்கு பதிலளித்த சம்பந்தன், அபிவிருத்தி என்பது ஒரு மாயை என்றார்.

வடக்கில் மக்களுக்குத் தேவை சுய கௌரவத்துடன் கூடிய அரசியல் தீர்வும், அவர்களது இழப்புகளுக்கு நீதியும்தான். இதை விடுத்து சாலைகளை அமைப்பது, மின்சாரக் கம்பங்களை நடுவது போன்றவற்றால் மட்டும் மக்களை திருப்திப் படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

வட மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் கூட பெரும் சர்வதேச அழுத்தத்தின் பின்னணியில்தான் நடந்து முடிந்தன என்று கூறிய சம்பந்தன், இந்தத் தேர்தலில் பல குறைகளை பட்டியலிடமுடியும் என்றும், ஆனாலும், குறைகளை மீறி, மக்கள் தங்களது கருத்தை தெளிவாக அரசுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் சம்பந்தன் கூறினார்.

இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்தி, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் சம்பந்தன் கோரினார்.

அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினாலே கூட, விமர்சனங்களிலிருந்து அரசு விடுபடலாம் என்று கூறிய சம்பந்தன் ஆனால் இது குறித்து அரசுக்கே ஒரு திடமான நிலைப்பாடு இல்லை, எனவே தான் இந்தப் பரிந்துரைகளைக் கூட அமல்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.

-BBC தமிழ்-