இலங்கைக்கு காலக்கெடு விதிக்க நவிபிள்ளைக்கு அதிகாரம் இல்லை : ரவிநாத் ஆரியசிங்க!!

509

Ravinatha-Aryasinha

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க தனது இலங்கை பயணம் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில் இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்களுக்கு வரும் 2014 மார்ச் மாதத்துக்குள் சுதந்திரமான, நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக சமூகம் தனியான விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து நேற்றைய அமர்வில் பதிலளித்துப் பேசிய இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இலங்கைக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நவநீதம்பிள்ளையின் வாய்மூல அறிக்கையின் பிரதி உரிய காலத்தில் தமக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய ரவிநாத் ஆரியசிங்க செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கே தமக்குத் தரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பதிலளிக்க ஒரு இரவு மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணசபை உள்ளிட்ட எல்லா மாகாணசபைகளுடனும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்குத் தாம் உறுதியளிப்பதாகவும் இலங்கை பிரதிநிதி தெரிவித்துள்ளார்.