வவுனியா சிவபுரம் பெரியார் முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா -2017

398

பெரியார் முன்பள்ளியினது மழலைகளின் விளையாட்டு விழா 2017 நேற்று (25.03.2017) அன்று இடம்பெற்றது. இவ் முன்பள்ளியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிவபுரம் மற்றும் கிச்சிராபுரம் ஆகிய இரு கிராமங்களினைச் சேர்ந்த சிறார்களும் கல்வி கற்றுவருகின்றனர். மேற்படி விளையாட்டு விழா ஆனது முன்பள்ளி ஆசிரியரினால் மிகச் சிறப்பான முறையிலும் சிறார்களினை மையப்படுத்திய வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் மழலைகளின் விளையாட்டு விழா ஆனது பிற்பகல் 02:30 மணிக்கு முன்பள்ளி ஆசிரியர் திருமதி லதிகா சிவமோகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானதுடன் ஆரம்ப நிகழ்வாக பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களினை முன்பள்ளிச் சிறார்கள் இருமருங்கிலும் வரிசையாக நின்று மாலையிட்டு வரவேற்றனர். பிரதம விருந்தினராக கௌரவ இ.இந்திரராசா – வடமாகாணசபை உறுப்பினர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.கோ. தர்மபாலன் – முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், கலாநிதி.த.விநாயகதாசன் – விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம், திருமதி.எஸ்.அருள்வேல் நாயகி – முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், கிராம சேவையாளர் மற்றும் சிவபுரம் மற்றும் கற்பகபுரம் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.முகமட் நஜீம், கிராம அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் அயலிலுள்ள முன்பள்ளிகளினுடைய ஆசிரியர்களும் வருகை தந்திருந்தனர்.

இவ் விழாவின் சிறப்பாக சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.முகமட் நஜீம் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் விழாவுக்கான வர்ணனைகளினையும் அறிவிப்புக்களையும் வழங்கயிருந்ததுடன் 30 இற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் சிறார்களுக்கு ஏற்ற வகையில் முன்பள்ளிச் சிறார்களின் மிகச்சிறந்த பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததுடன் தமிழ் மற்றும் முஸ்லீம் ஆகிய இரு இனங்களினை சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் இன ஒருமைப்பாட்டுடனும் ஆர்வத்துடனும் தமது வினைத்திறனான பங்களிப்பினை வழங்கியிருந்தனர். மேலும் இறைவணக்கமும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்கள் சார்பிலும் முன்பள்ளிச் சிறார்களினால் செலுத்தப்பட்டது. நடுவர்களாக கலந்து கொண்ட அயல் கிராமங்களினைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் சிறார்களினை உற்சாகப்படுத்தும் வகையில் தமது பணியினை மேற்கொண்டு இருந்தனர்.

அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் விழாவினை நிறைவுறுத்தியமை விழா ஏற்பாட்டாளர்களினுடைய நேர முகாமைத்துவத்தினை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. மேலும் கிராம மக்களினது ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகச்சிறப்பான முறையில் அமைந்ததுடன் முன்பள்ளி ஆசிரியர் பிள்ளைகளினை மிகச் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விழாவின் இறுதியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு.கோ. தர்மபாலன் – முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் உரையாற்றியதுடன் சிறார்களின் எதிர்காலத்திற்கு முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டதுடன் கௌரவ இ.இந்திரராசா – வடமாகாணசபை உறுப்பினர் அவர்களது முன்பள்ளிகளுக்கான நிதி உதவிகள் பற்றியும் பாராட்டிப் பேசியதுடன் அவருக்கான தமது நன்றிகளினையும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய கௌரவ இ.இந்திரராசா – வடமாகாணசபை உறுப்பினர் அவர்கள் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றி மேலும் வலியுறுத்தியதுடன் பல்லின சமூகம், மொழி, கலாச்சாரங்களினை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான முறையிலும் இன மத பேதங்கள் இன்றி ஒருமைப்பாட்டுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ணடமை பற்றியும் பாராட்டிப் பேசினார்.