பீகாரில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர்கள் கை கால்கள் பிடித்து தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் அரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
உடல் நலம் பாதிக்கபட்ட பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்து செல்ல வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் அந்த பெண்ணின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லை என்று ஊழியர்கள் கைவிரித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு வெளியே சாலையோரம் நீண்ட நேரம் படுக்க வைக்கப்பட்டு இருந்துள்ளனர். அருகில் செய்வதறியாது அவரது கணவர் கை குழந்தையுடன் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்.
இதனிடையே அங்கு வந்த அவரது உறவினர்கள் பெண்ணின் கை, கால்களை பிடித்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே எடுத்துச் சென்றனர்.
மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் தூக்கி சென்றது அங்கு இருந்த பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது. அந்தபெண்ணிற்கு ஸ்ட்ரெச்சர் தர மறுத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.