கல்விப் பொதுத் தராதர சாதரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ் வேலைத்திட்டத்துக்கமைவாக 26 புதிய கற்கை நெறி பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் தங்களது பாடசாலை கல்வியை கைவிட்டு சிறு தொழில் செய்யும் நிலை காணப்பட்டது.
இதனால் அவர்களது வாழ்வாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இன்றி பாரிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால், அதனை மாற்றியமைத்து நாட்டில் அனைவருக்கும் சிறந்த கல்வியை ஏற்படுத்துவதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காகவே நாம் கடந்த காலத்தை விடவும் அதிகமாக கல்வித்துறைக்கு முதலீடு செய்துள்ளோம்.
கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன்மூலம் குறித்த சித்தியடையாத மாணவர்களும் உயர்தரக்கல்வியை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பேற்படும்.
அவர்களுக்கான விளையாட்டு தொழிநுட்பம் உள்ளிட்ட 26 தொழில் ரீதியான கற்கைநெறி பிரிவுகள் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த 26 கற்கை நெறிபிரிவுகளில் மாணவர்கள் மூன்று பாடங்களில் தங்களது கற்கை நெறியினை தொடருவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இத் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் சுட்டிக் காட்டினார்.






