பண்டாரநாயக்க குடும்பம் இனவாதத்தை தூண்டவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் பண்டாரநாயக்க குடும்பம் 80 ஆண்டுகள் அரசியல் நடத்தியது. தேர்தல் தொகுதியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன வன்முறைகள் வெடிக்கவில்லை.
மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். எனினும் தற்போது அந்தக் கட்சிக்கு வேறு சிலர் உரிமை கோருகின்றனர்.
இன முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற ஓர் நிலைமை உருவாகியுள்ள இந்த நிலையில் சிலர் மத முரண்பாடுகளை தூண்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாட்டில் சில இனவாதத்தை தூண்டும் சந்தர்ப்பத்திலும் அரசாங்கமும் பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற காரணத்திற்காக எனது தந்தை தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகம் செய்யவில்லை. சிலர் இதனை பிழையாக அர்த்தப்படுத்துகின்றனர்.
காலணித்துவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே அவரின் நோக்கமாக அமைந்தது. அப்போதைய தமிழ்த் தலைமைகளும் தனி நாட்டைக் கோரவில்லை.
குறிப்பாக செல்வநாயகம் தனிநாட்டைக் கோரவில்லை தமிழ் மொழிக்கு நியாயம் கிட்ட வேண்டுமெனவே கோரியிருந்தார். இதன் அடிப்படையிலேயே தமிழ் மொழி விசேட சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
13ம் திருத்தச் சட்டத்தை திருத்த முடியாது இனவாதத்தை தூண்டி வருகின்றனர் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். திஹரியவில் நடைபெற்ற பண்டாரநாயக்க நினைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.