பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டைப் பற்றி நாம் அக்கறை காட்டுகிறோம் என நியூசிலாந்து பிரதம அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 68வது அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு நியூயோர்க் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நியூசிலாந்து பிரதம அமைச்சர் ஜோன் கேவும் நேற்று சந்தித்து சினேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இன்னும் ஒரு மாதத்தில் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற 2013 பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாடு உள்ளிட்ட பல விடயங்களைப்பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தலைவர்களின் மகாநாட்டுக்கு வருகை தருவதற்கு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என ராஜபக்ஷவிடம் தெரிவித்த பிரதம அமைச்சர் கே, 2011ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாட்டில் தமக்கு கலந்துகொள்ள முடியாமல் போனதால் இலங்கையில் நடைபெறுகின்ற மகாநாட்டைப்பற்றி தாம் பெரிதும் அக்கறை காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
பொதுநலவாய நாடுகளின் வியாபார மன்றத்திற்கு நியூசிலாந்து பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பும்படி ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜோன் கே வியாபார மன்றத்திற்கு தூதுக்குழுவொன்றை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை நியூசிலாந்தின் பால் உற்பத்தித் துறைக்கு மிக முக்கியமான சந்தையாக இருக்கின்றது எனக் குறிப்பிட்ட பிரதம அமைச்சர் கே மிகச் சிறந்த தொழில்நுட்ப நிபுணத்துவ அறிவு தமது நாட்டுக்கு இருக்கின்றது எனவும் இலங்கையின் பால் உற்பத்தித் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இவ் அறிவை பகிர்ந்துகொள்வதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தியைப்பற்றி நியூசிலாந்து தலைவருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ வறுமையும் வேலையில்லாத்தன்மையும் குறைந்துகொண்டிருக்கிற பெருளாதார சூழல் ஒன்று நாட்டில் உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டினார்.
2015 – 2016 காலவரையறையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஆசனம் ஒன்றை உரித்தாக்கிக்கொள்வதற்கு நியூசிலாந்து மேற்கொள்கின்ற முயற்சிக்கு ஒத்துழைப்பை நல்குவதைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி பிரதம அமைச்சர் கே, ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.
இலங்கை யாருக்கு ஒத்துழைப்பு நல்குவது என இன்னும் தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ராஜபக்ஷ ஆயினும் இக்கோரிக்கைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வதாவும் நியூசிலாந்து பிரதம அமைச்சருக்கு தெரிவித்தார்.