பாதணிகள் நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், மிகவும் நாற்றமடிக்கும் சப்பாத்துகளுக்கான போட்டி அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இப்போட்டி 42 ஆவது தடவையாக நடைபெற்றது. இவ்வருடப் போட்டி நியூயோர்க் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமெரிக்காவின் அலாஸ்கா, நியூ மெக்ஸிகோ, கொலராடோ உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றினர். 4 நடுவர்கள் பாதணிகளை மணந்துபார்த்து புள்ளிகளை வழங்கினர்.
12 வயதான கொனோர் ஸ்லோகொம்பே எனும் சிறுவன் கொண்டுவந்த சப்பாத்து மிக நாற்றமடிக்கும் பாதணியாக தெரிவுசெய்யப்பட்டது. அச்சிறுவனுக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 2,500 டொலர் (சுமார் 38,000 ரூபா) பணப்பரிசு வழங்கப்பட்டது.
பாதணிகளை நாற்றமடிக்கச் செய்வதற்காக பல்வேறு உபாயங்கள் பின்பற்றப்பட்டனவாம். ஒருபோதும் காலுறைகளை (சொக்ஸ்)அணியாதிருத்தல், சேற்றுக்கூடாக நடத்தல் ஆகிய நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டதாக போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.