வீதியில் நின்றிருந்த நபர் ஒருவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று அவருக்கு ஒருவகை மாத்திரை கலந்த பியரை அருந்தக் கொடுத்து பாழடைந்த இடமொன்றில் வைத்து அவர் அணிந்திருந்த சுமார் 1,75,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியை முச்சக்கர வண்டியுடன் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான முச்சக்கர வண்டியின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்தவராவார்.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி கொழும்பிலிருந்து சிலாபத்துக்கு வந்துவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது வென்னப்புவ பிரதேசத்தில் பஸ்ஸூக்காக காத்திருந்த நபர் ஒருவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளதாகவும் பின்னர் வென்னப்புவ பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து இருவரும் பியர் அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பியர் அருந்திய பின்னர் மயக்கமடைந்த நபர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் அவரிடமிருந்த பணத்தையும் கொள்ளையிட்டுக் கொண்டுள்ள முச்சக்கர வண்டியின் சாரதி மயக்க நிலையிலிருந்த நபரை நைனாமடம் பிரதேசத்தில் வீதியில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.






