நகத்தை வெட்டினால் படுக்கையில் வீழ்ந்து விடுவேன் : வியட்நாமைச் சேர்ந்தவருக்கு விநோத நோய்!!

522

 
வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார்.

நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என இவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஜாலியாக நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் நகங்களால் இடையூறு ஏற்பட வெட்டிவிட்டேன். உடனே உடல்நிலை மிகவும் மோசமானது. பல மருத்துவர்களைப் பார்த்தும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வருடம் படுக்கையில் இருந்தேன்.

பிறகு உடல் தேறி, நகங்களை வெட்டியபோது மீண்டும் உடல்நிலை மோசமானது. நகங்களுக்கும் உடலுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நினைத்தேன். அதிலிருந்து நகங்களை வெட்டாமலும் உடையாமலும் பாதுகாத்து வருகிறேன். ஒரு நகம் தானாக உடைந்தாலும் சில மாதங்கள் படுக்கையில் விழுந்துவிடுவேன். இதனால் என் மனைவியும் குடும்பத்தினரும் நகங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. பார்ப்பதற்கு உறுதியாகத் தோன்றினாலும் ரொம்ப எளிதாக உடைந்துவிடும். தண்ணீர் பட்டால் உடையும் என்பதால் நகங்கள் மீது தண்ணீர் படாமல் குளிப்பேன்.

அதனால் அடிக்கடி குளிப்பதில்லை. உணவைக் கூட மனைவிதான் ஊட்டிவிட வேண்டும். மழை வரும்போது நகங்களை மட்டும் பிளாஸ்டிக் பையால் மூடிவிடுவேன். உடைகளைப் போடும் போதுதான் அதிக சிரமத்துக்கு உள்ளாகிறேன். இரவில் இரண்டு பக்கங்களிலும் தலையணைகளை வைத்து நகங்களைக் கிடத்தி வைத்திருப்பேன். தூக்கத்தில் கூடப் புரண்டு படுக்க முடியாது. வண்டி ஓட்டினாலும் சிரமமாகவே இருக்கும். ஒருமுறை விபத்தில் மாட்டிக்கொண்டேன்.

என்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட நகங்களைத்தான் காப்பாற்ற நினைத்தேன். சிலர் நகங்களைக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகச் சொல்கிறார்கள். எப்படிக் கொடுப்பேன்? சுவர்களில் ஓவியம் தீட்டுவதுதான் என் தொழில். எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை மட்டும் விட்டுவிடவில்லை. குழந்தைகள் என்னைப் பார்த்தாலே பயந்து அலறுவார்கள். பெரியவர்கள் பாராட்டுவார்கள். 55 செ.மீ. நீளமிருக்கும் என் நகங்களை கின்னஸில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது என லூ காங் குறிப்பிட்டுள்ளார்.