6அநுராதபுரம் விஹார கல்லஞ்சிய 50 வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தனது மகள்மார் இருவரை வீட்டுக்கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் கடந்த 7 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது நுவரெலியா பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றிவரும் உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டில் இருந்திருக்கவில்லை எனவும், அவ் வேளையில் வீட்டிலிருந்த குறித்த பெண்ணின் மூத்த மகனான 7 வயது சிறுவனுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் நதீகா மதுரங்கி குணசேகர (30), புவனீ நுவன்ஞனி ( 4) மற்றும் ஒன்றரை வயதான பிகுன்யா செவ்வந்தி ஆகிய மூவருமாவர்.
பிள்ளைகள் மூவரும் நித்திரைக்கு சென்றதன் பின்னர் இப் பெண் கடிதமொன்றை எழுதி, அக் கடிதத்தை குடும்பப் படங்கள் அடங்கிய புகைப்பட அல்பமொன்றினுள் வைத்து அதனை சமையலறையை அடுத்து இருந்த அறையிலிருந்த மேசை மீது வைத்துவிட்டு, மகள்மார் இருவரையும் கிணற்றில் வீசிவிட்டு வீட்டு சமையலறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏழு வயதான மகன் மறுநாள் சனிக்கிழமை காலை 7 மணியளவில் நித்திரை விட்டெழும்பி சமையலறைக்கு சென்று பார்த்தபோது. தனது தாய் தூக்கில் தொங்குவதனை கண்டு அதிர்ச்சியடைந்து இவ் விடயத்தை அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதனையடுத்து அவர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
தனது பிள்ளைகள் இருவரும் நித்திரையில் இருக்கும்போதே கிணற்றில் போடப்ப ட்டிருக்கலாம் எனவும் தனது மகன் சற்று பெரியவன் என்பதனால் அவன் விழித்துக் கொள்ளக்கூடும் என்ற எண்ணத்தில் அப் பெண் அவனை விட்டுவைத்திருக்கலாம் என்றும் பொலி ஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தை பொலி ஸார் மீட்டதுடன் உயிரிழந்த பெண்ணினால் அவரது மரணம் குறித்து உறவினர்களுக்கு அறிவிப்பதற்கு இலகுவாக இருப்பதற்காக அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரின் தொலைபேசி இலக்கங்கள் எழுதப்பட்டவாறு சமையலறை கதவில் ஒட்டப்பட்டிருந்த காகிதமொன்றினையும் மீட்டிருந்தனர்.
இதேவேளை, அநுராதபுரம் பதில் நீதிவான் நதீ ஆகாஷ் குரே முன்னிலையில், உயிரிழந்த சிறுமிகள் இருவரினது சடலங்களும் மீட்கப்பட்டு நீதிவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இம் மூன்று சடலங்களையும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு மரண விசாரணைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் அப்பரிசோதனை அறிக்கைகளை நீதி மன்றுக்குச் சமர்ப்பித்ததன் பின்னர் சடலங்களை உயிரிழந்தவர்களுக்கு நெருக்கமான உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







