உலகளாவிய ரீதியில் சாதனை படைக்குமா கட்டுநாயக்க விமான நிலையம்?

436

புனரமைக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலகிலுள்ள எந்தவொரு விமானத்தையும் தரையிறக்க முடியும் என பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

விமானம் நிலையத்தின் ஓடுபாதையின் தரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க செய்தியாளர் சந்திப்பொன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திட்டமிட்ட வகையில் புனரமைக்கப்படாமையினால் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து சேவையின் சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தன.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து சேவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், மிகப்பெரிய விமானங்களை தரையிறக்குவதற்காக பிரதான ஓடுபாதையில் 75 மீற்றர் அகலம் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இங்கு ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலகின் எந்தவொரு விமானத்தையும் தரையிறக்க முடியும். எனினும் 45 மீற்றர் அகலத்தை கொண்ட E குறியீட்டிலான அளவிலேயே காணப்படுகின்றது.

எனினும் ஓடுபாதையின் இரண்டு தோல்பட்டைகளும் 15 அடி என்ற கணக்கில் பெரிதாக்கப்பட்டுள்ளது. அதனால் 75 மீற்றர் அகலமாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக எந்தவொரு பிரச்சினையுமின்றி A380 விமானம் உட்பட அனைத்து விமானத்தையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியும்.

இதற்கு முன்னர் விமான ஓடுபாதையில் விமானங்களை இயக்கும் போது இரண்டு பக்க என்ஜின்களை இயக்காமல் நடுவில் இருக்கும் இரண்டு விமான என்ஜின்களை மாத்திரம் பயன்படுத்தியுள்ள நிலையில் விமான சற்று மேலே சென்றதன் பின்னர் ஏனைய என்ஜின்கள் இயக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புனரமைப்பின் பின்னர் இரண்டு பக்க தோள்பட்டை பகுதிகள் பெரிதாக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து என்ஜின்களையும் இயக்கிய நிலையில் விமானத்தை இயக்க முடியும். உலகிலுள்ள எந்தவொரு விமானத்தையும், கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையில் இயக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.