நைஜீரிய வீதிப் பாதுகாப்புப் படையணியின் உயர் அதிகாரி ஒருவர், அப்படையின் பெண் ஊழியர்களின் தலைமயிரை கத்தரித்தமை தொடர்பாக ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நைஜீரியாவின் வீதிப் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்துக்கு வீதிப் பாதுகாப்புப் படையணி பொறுப்பாக உள்ளது.
அப்படையணியின், சிரேஷ்ட தளபதிகளில் ஒருவரான அன்ட்ரூ குமாபயி, அப்படையணியின் பெண் ஊழியர்கள் பலரின் தலைமயிரை கத்தரித்தார்.
வீதிப் பாதுகாப்புப் படையணியின் வீதிகளை மீறும் வகையில் சிகையலங்காரம் செய்திருந்த, பெண் ஊழியர்களைத் தண்டிக்கும் விதமாக அன்ட்ரூ குமாபயி இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவின் தென் பிராந்தியத்திலுள்ள ரிவர்ஸ் மாநிலத்தின் வீதிப் பாதுகாப்புப் படையணியின் தளபதியாக அன்ட்ரூ குமாபயி பதவி வகிக்கிறார். அம்மாநிலத்தின் போர்ட் ஹார்கோர்ட் நகரில் கடந்த திங்கட்கிழமை அவர் பெண் ஊழியர்களின் தலைமயிரை கத்தரித்தார்.
இந்நடவடிக்கை தொடர்பாக அன்ட்ரூ குமாபயிக்கு எதிராக நைஜீரியா அதிகாரிகள் ஒழுங்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வேறு சில அதிகாரிகள் குறித்து பிராந்தியத்திலிருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நைஜீரிய வீதிப் பாதுகாப்புப் படையணியின் பேச்சாளர் பிசி கஸீம் தெரிவித்துள்ளார்.
அன்ட்ரூ குமாபயியின் நடவடிக்கையை நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரியின் உதவியாளர்களில் ஒருவரான லொராட்டா ஒனாச்சி கண்டித்தள்ளார். இது பெண்களை அவமதிக்கும் நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார்.
நைஜீரிய வீதிப் பாதுகாப்புப் படையணியின் பெண் ஊழியர்கள் தமது தலைமயிரை உத்தியோகபூர்வ தொப்பிக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், அவ்வூழியர்கள் நீளமாக தலைமயிர் வளர்ப்பது தடைசெய்யப் படவில்லை.







