அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் உயரமான யுவதி!!

262

இலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல கூடைப்பந்து ஷூட்டரும் (Shooter) ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனையுமான இலங்கையின் தர்சினி சிவலிங்கம் என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை கூடைப்பந்து வீராங்கனை ஒருவர் சர்வதேச அணியில் இணைந்து விளையாடுவதற்கு பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் இலங்கை விளையாட்டு வீரர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பமும் இதுவென குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய, தர்சினி அவுஸ்திரேலியாவில் உள்ள வெஸ்ட் பெல்கன்ஸ், மற்றும் மெல்பேர்ண் சென்ட் எல்பன்ஸ் என்ற பிரபல அணிகளில் விளையாடவுள்ளார். 6 மாத ஒப்பந்த அடிப்படையில் தர்சினி இந்த அணிகளில் விளையாடவுள்ளார்.

அவர் அவுஸ்திரேலியா அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை முன்னாள் கூடைப்பந்து வீராங்கனையும் பயிற்சியாளருமான திலக்கா ஜினதாஸவினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

திலக்கா தற்போது புரூணை தேசிய கூடைப்பந்து அணியின் பயிற்விப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அவரது பரிந்துரைக்கமையவும், தர்சினியின் முகாமையாளர் எஸ்.கோபிநாத் என்பவரின் முயற்சியால் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து தர்சினி அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடவுள்ளார்.

அவருக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக அவரது முகாமையாளர் எஸ்.கோபிநாத் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் தேசிய கூடைப்பந்து சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தற்போது அதற்கான உரிய அனுமதி கிடைக்காமையினால் இலங்கை வீராங்கனை ஒருவருக்கு முதல் முறையாக கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் ஆபத்தும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.