2282 கோடி ரூபா செலவில் மகாபாரத கதை!!

373

இந்திய சினிமாத்துறை வரலாற்றில் சுமார் 2282 கோடி ரூபா (150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் மகாபாரத கதையை, படமாக 5 மொழிகளில் உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

குறித்த படமானது மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த படத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரரான பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாளர் தயாரிக்க முன்வந்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாவதாக வரும் பீமனின் பார்வையில் வைத்து இந்த கதையை எழுதியுள்ளதாகவும், குறித்த படத்தை இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ளதாகவும், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கவுள்ளனர். இதுதவிர, பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடவுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பை 2018 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, எதிர்வரும் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், படத்தை இரண்டு பாகமாக எடுக்கவுள்ளதாகவும், முதல் பாகம் வெளிவந்த 3 மாதங்களுக்குள் இரண்டாம் பாகத்தை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த படத்தை 100 மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டு, சுமார் 3 பில்லியன் மக்களிடத்தில் மகாபாரத கதையை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.