மியன்மாரில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில், 285 பேர் உயிரிழந்துள்ளனர். 1,073 பேர் காயமடைந்துள்ளனர்.
மியன்மாரில் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடும் தண்ணீர் திருவிழாவும் அடங்கும்.
அவ்வாறு செய்வதன்மூலம் தங்கள் மீதான பாவங்கள் நீங்கும் எனவும், குறைகள் போக்கப்பட்டு புதிய வாழ்வு மலரும் எனவும் நம்புகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்களாக தண்ணீர் திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்துக்களால், 285 பேர் மியன்மாரின் பல பாகங்களிலும் உயிரிழந்தனர்.
யாங்கூன் பகுதியில் 44 பேரும், மண்டாலே பகுதியில் 36 பேரும் நய் பி டோ பகுதியில் 10 பேரும் சகைங் பகுதியில் 26 பேரும் தனின்தர்யி பகுதியில் 11 பேரும் பகோ பகுதியில் 37 பேரும் மக்வே பகுதியில் 11 பேரும் மொன் மாநிலத்தில் 20 பேரும் ரகின் பகுதி யில் 17 பேரும் ஷன் மாநிலத்தில் 29 பேரும் அயெயாவட்டி பிராந்தியத்தில் 28 பேரும் இறந்துள்ளனர்.
அதேநேரம் கொலை, கார் விபத்து, போதைப் பொருள் பயன்பாடு, ஆயுதங்கள் பயன்பாடு, கலவரம் என 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தில், 272 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,086 பேர் படுகாயமடைந்தனர்.







