வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்ந்தும் பயனற்ற நிலையில்!!

496

பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே.

வவுனியா நகரில் இருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். வீதியில் 195 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அது இன்று பாவனையின்றிக் காணப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வவுனியா நகரில் நிறுத்தப்பட்டு வந்தமையினால் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளின் நன்மை கருதி ஒரே இடத்தில் பஸ்களை நிறுத்துவதற்காக இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

எனினும், புதிஸ் பஸ் தரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்த பின்னர் இணைந்த நேர அட்டவணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் தொடர்ந்தும் சர்ச்சைகள் ஏற்பட்டன.

அந்த சர்ச்சை தாக்குதல் மேற்கொள்ளும் அளவிற்கு வலுப்பெற்றது. எனினும், இன்று மீண்டும் பழைய இடங்களிலே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு வழங்குவதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருத்தார்.

அவர் அவ்வாறு கூறி மூன்று வாரங்களாகியுள்ள நிலையில், அவரிடம் இது குறித்து வினவியபோது..

விடுமுறை காலம் என்பதால் காலதாமதம் ஏற்படுவதாகவும் இரு தரப்பினரும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் வர்தமானியில் அறிவிப்பதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.