கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் : காதர் மஸ்தான்!!

210

 
கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முப்படையினருடான சந்திப்பின் பின்னர் படையினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் மக்கள் விவசாயம் செய்ததற்கான அனைத்து விதமான ஆதாரங்களும் காணப்படுகின்றன பலவருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட சில கட்டடங்கள் காணப்படுகின்றன. தென்னந்தோப்புகள் காணபடுகின்றன. எனவே இவ்வாறு எல்லா வளமும் நிறைந்த ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன் என்ற வகையில் நானும் இடம்கொடுக்கப்போவதில்லை.

நல்லாட்சியில் மக்களது காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டாலும் அவை ஆமை வேகத்திலேதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலை மாற்றமடைந்து மக்களுக்கு உரித்தான காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்களை நிம்மதியாக வாழ வழிசமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.