30 வருட ஆயுத மற்றும் அகிம்சைப் போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை : ஜி.ரி.லிங்கநாதன்!!

325

30 வருட ஆயுதப் போராட்டம் மற்றும் அகிம்சைப் போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

இன்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது..

இந்த நாட்டிலே எமது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றப்பட்டு எழுச்சி பெற்ற காலத்தில் இளைஞர் சேவை மன்றத்தை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு காலகட்டம் இருந்தது. அதே போல் சர்வோதயத்தை நம்ப முடியாத காலகட்டம் இருந்தது.

அதை ஏன் நான் சொல்கின்றேன் என்றால் 1986 அல்லது 1987 இல் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த மகேந்திரநாதன் என்பவர் கொழும்பிலே நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு போன காரணத்தினால் ஒரு இயக்கத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதற்கு காரணம் அந்தநேரத்தில் இளைஞர் சேவை மன்றத்தை அந்நேரம் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இன்று இந்த மண்னைச் சேர்ந்தவர்கள் இந்த இளைஞர்கள் சேவை மன்றத்திற்குள் உள்வாங்கப்படுகின்ற போது நாங்கள் ஒட்டு மொத்தமாக சிங்களம், தமிழ், முஸ்லீம் என்கின்ற நிலைமை மாறி நாட்டிலே இந்த இளைஞர்கள் சேவைகள் மன்றம் எதிர் காலத்திலே சிறப்பாக நடைபெறும் என்பது எனது நம்பிக்கை.

அண்மையில் இளைஞர்களின் எழுச்சி பல இடங்களில் நிலைநாட்டப்பட்டிருந்தாலும் கூட, அண்மையில் இந்தியாவிலே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வை ஒரு சர்வதேச தரத்திற்கு அல்லது யாருமே எதிர்பாராத விதத்திலே இந்திய மத்திய அரசை அடிபணிய வைத்தவர்கள் இந்த தமிழ் இளைஞர்கள்.

உங்களிடம் அந்த சக்தி இருக்கின்றது. அந்த சக்தியை நீங்கள் சரியாக பயன்படுத்துங்கள். இந்த இளைஞர்கள் இப்படியான பயிற்சிகளில் கலந்து கொள்வதை பார்ப்பதற்கு சந்தோசமாக உள்ளது. உங்களுடைய காலத்தை வீணாக்காமல் உங்களுக்கு தெரிந்த அல்லது கற்றுக்கொள்கின்ற முயற்சியை எடுத்துக்கொண்டது பாராட்டத்தக்க விடயம்.

அதே நேரம் இன்னுமொரு ஆபத்தையும் எங்களது சமூகம் சார்ந்து சொல்ல விரும்புகின்றேன். அதாவது பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற விடயங்கள். நீங்கள் தொடர்ச்சியாக கல்வியில் அக்கறை செலுத்தியிருந்தால் இங்குவந்து பயிற்சி பெற வேண்டிய தேவை வந்திருக்காது. ஆகவே பொறுப்பு வாய்ந்த எல்லோருக்கும் கடமையிருக்கிறது. நாங்கள் வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டாலும் கூட, வவுனியா மாவட்டத்தில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற விடயத்தில் இளைஞர் சேவை மன்றம் கவனத்தை செலுத்த வேண்டும்.

ஏன்எனின் 30 வருட ஆயுதப் போராட்டம், 30 வருட அகிம்சை போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. இனி எங்களால் கல்வியால் மாத்திரமே முன்னுக்குவரக்கூடியதாக இருக்கும். கல்விக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுங்கள். உங்களிற்கு பக்க பலமாக நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தார்.