வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பினை மீறி, 4 முறை அணுகுண்டு, ஒருமுறை ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதித்தது.
இதனால் வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்நாட்டின் மீது மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
இருந்தத போதிலும் தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
வட கொரியாவின் இராணுவம் அமைக்கப்பட்ட 85-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. அப்போது அணு குண்டு சோதனை அல்லது ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கார்ல் வின்சன் என்னும் மிகப்பெரிய விமானந்தாங்கி போர் கப்பலை கொரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
இதனால், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் வலுத்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரியாவை தாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், இருதரப்பினரும் அமைதியாக நடக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும், மொத்தத்தில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அணு சக்தி அற்ற முறையை அடையவும், வடகொரியாவின் அணுப்பிரச்னைக்கு தீர்வுகாணவும் இருதரப்பினரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.






