நாளை இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முழு ஆதரவு!!

304

அரச படையினரால் கைது செய்யப்பட்டு அல்லது ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நிலையை அறியத்தரக் கோரி வட-கிழக்கில் பல பாகங்களிலும் உறவினர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவை பற்றி நல்லாட்சி அரசு உரிய பதிலை வழங்கவேண்டுமென சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வலியுறுத்துகிறது. என அவ் அமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் சு.டொன்பேஸ்கோ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, வவுனியா, மருதங்கேணி, திருகோணமலை, முல்லைத்தீவு என போராட்டம் தொடர்ந்து கொண்டு செல்கிறது. எனினும் அப்போராட்டத்திற்கான பதிலை வழங்காது நல்லாட்சி அரசாங்கம் காலத்தை இழுத்தடித்து வருகிறது.

காலத்திற்கு காலம் அப்போராட்ட காரர்களை சந்திக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள் காணமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களைத் தந்தால் உரிய தரப்பிடம் கொடுத்து தீர்வு பெற்று தருவதாக சொல்லுகின்றார்களே அன்றி எதுவும் செய்ததாக இல்லை.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. நல்லாட்சி அரசு பதவிக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களைக் கூட அரசாங்கம் இன்னும் சேகரிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதிலைக் கூறும்படி கேட்டும் உறவுகள் இறக்கும் வரை காலத்தை இழுத்தடித்து பதில் கூறுவதிலிருந்து தப்பிவிடலாம் என்று அரசு நினைக்கிறதா?

இவர்கள் சனநெரிசலிலோ, திருவிழாவிலோ, வழிதவறி சென்றவர்களோ அல்ல அரச பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அவர்கள் இறந்து விட்டார்களா? அப்படியாயின் இறந்தது எவ்வாறு என்பதையும் உயிருடன் இருந்தால் எங்கே இருக்கிறார்கள், எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்றும் உடனடியாக வெளியிடவேண்டும் என கோருகின்றோம்.

இப்போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் அமைப்புக்கள் இதனை தனியே காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் சட்ட வரம்புகளுக்கு அப்பால் சமூகத்திற்கு எதிராக புரியப்பட்ட மக்கள் விரோதச் செயற்பாடு என்பதைக் கருத்தில் கொண்டு போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், பரந்துபட்ட மக்களை இணைக்கும் வெகுஜன போராட்டமாக மாற்றவும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு தனிநபர்களோ உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளே தமது சுய இலாபத்திற்காக இப்போராட்டத்தை பயன்படுத்த கூடாது எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு காணி மீட்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோருக்கான தீர்வு, ஆகிய மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக வட கிழக்கில் நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அவ் அமைப்பு தெரிவிக்கின்றது.