ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ராணா, நாசர், ரோஹினி, சத்தியராஜ் உட்பட பலர் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் ‘பாகுபலி 2’.
உலக சினிமா அதிகப்படியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த படம் தான் ‘பாகுபலி 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் கன்னடம், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு, இன்று உலகம் முழுவதும் சுமார் 9,000 இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகின்றது.
மேலும், முதல் பாகத்தில் நடித்த ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ரோஹினி உட்பட பலர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் சுமார் 6,500 திரையரங்குகளில் படம் வெளியாகின்றது. வெளிநாடுகளில் சுமார் 1,000 திரையரங்குகளிலும் வெளியாகவிருக்கின்றது. ஆக, மொத்தமாக 7, 500 திரையரங்குகளுக்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இப்படத்தை பி.ஜே.எம். நசருள்ளா இறக்குமதி செய்துள்ளார். இலங்கையின் முன்னிலை திரைப்பட விநியோக நிறுவனம CEL நிறுவுனம் இப்படத்தை இலங்கையில் வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, சாட்டிலைட்ஸ் உரிமம், வெளியீட்டு உரிமம் ஆகியவற்றின் மூலம் 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி 2’ திரைப்படத்துக்கு இந்திய தணிக்கைச் சபை யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. பாகுபலி 2’ படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள். அதாவது இடைவெளியையும் சேர்த்தால் 3.15 மணி நேரம். ‘பாகுபலி’ முதல் பாகம் 2.30 மணி நேரம்தான். அட அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே என்று சொல்லும் அளவுக்கு வேகமாக ஓடி முடிந்தது அந்தப் படம். ஆனால், இரண்டாம் பாகத்தில்தான் முக்கிய காட்சிகள், திருப்பங்கள் இடம்பெறுகின்றன. எனவேதான் இந்தப் படம் அரை மணி நேர நீளம் அதிகம் என்கிறது படக்குழு.
இத் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பம் உள்ள திரையரங்கிலும் வெளியாகும் என்று பாகுபலி திரைப்படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) தொழில்நுட்ப வடிவில் வெளியாவது இதுவே முதல்முறை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்ப திரையரங்கில் வெளியாகாது என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டும் ஐமேக்ஸ் தொழில்நுட்ப திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ் பதிப்பிலிருந்து சுமார் 44 விநாடி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் ராணா அரசராக பொறுப்பேற்கும் முக்கிய காட்சிகளாக இடம்பெற்றிருந்து. படக்குழு துரிதமாக செயல்பட்டு, உடனடியாக இணையத்திலிருந்து நீக்கியதாக கூறப்படுகின்றது.
எனினும், பாகுபலி 2 காட்சிகள் கசிந்தாக கூறப்படுவதை படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா மறுத்துள்ளார். பல நாடுகளிலும் தணிக்கைத் துறையினருக்காக அன்றி, பொதுமக்களுக்காக திரையிடப் படவில்லை என நேற்றுமுன்தினம் அவர் தெரிவித்திருந்தார்.






