இயக்குநரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் மும்பை மொடல் அழகிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த மொடல் ப்ரீத்தி ஜெயின், இந்தி பட இயக்குநர் மாதூர் பந்தர்கரை கொலை செய்வதற்கு குண்டர்களுக்கு பணம் கொடுத்ததாக அவர் மீது 2005-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
மாதூர் பந்தர்கரை கொலை செய்ய குண்டர்களுக்கு 75,000 ரூபாய் பணம் வழங்கியதாகவும், அவர்கள் பந்தர்கரை கொலை செய்யாததால் ப்ரீத்தி ஜெயின் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
பணத்தைத் திரும்பத் தராத குண்டர்கள், காவல்துறையில் தெரிவித்ததையடுத்து, ப்ரீத்தி ஜெயின் மீதும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது காவல்துறை கொலை செய்ய சதி செய்ததாக வழக்குப்பதிவு செய்தது.
இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், மும்பை நீதிமன்றம் ப்ரீத்தி ஜெயின் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் ப்ரீத்தி ஜெயினுக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. 15,000 ரூபாய் செலுத்தி ஜாமீனில் செல்லலாம் என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.






