மன்னார் அடைக்கலமாதா திருச்சொரூபம் திருட்டு!!

973

matha

மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அடைக்கலமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கலமாதா திருச் சொரூபம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இனந்தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரையுமான நேரப்பகுதிக்குள் குறித்த ஆலயத்தினுள் சென்ற இனந்தெரியாத நபர்கள் கண்ணாடிக் கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட அடைக்கலமாதா திருச்சொரூபத்தை வெளியில் எடுத்து அச்சொரூபத்திற்கு போடப்பட்டிருந்த ஆடை களையப்பட்டு அதே இடத்தில் வைக்கப்பட்ட நிலையில் சொரூபம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆலயத்தில் பணி புரிகின்ற ஒருவர் ஆலையத்தினுள் சென்று பார்த்த போது மாதாவின் சொரூபம் அங்கு இல்லாதமை தெரிய வந்தது. உடனடியாக குறித்த ஆலயத்தின் நிர்வாக சபையினர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் முருங்கன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை குறித்த ஆலயத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது இராணுவத்தினரும் வருகை தந்திருந்தனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் தடையங்களை கண்டறியும் பொருட்டு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் நீண்ட தூரம் ஓடிய போதும் எவ்வித தடயங்களும் மீட்கப்படவில்லை.

இறுதியாக களையப்பட்டு கிடந்த மாதாவின் ஆடையினை முருங்கன் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர். குறித்த சொரூபம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை அதிகாலை மன்னார் முருங்கன் பிராதன வீதியில் உள்ள ரஜ மஹா விகாரையில் 6 புத்தர் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.