வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில்!!

293

 
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின் காலத்தில் பாடசாலை கல்வி மற்றும் பௌதீக ரீதியில் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில், புதிய அதிபராக நித்தியானந்தம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அதனால் இவ் அதிபர் நியமனத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி தனக்குள்ள போதிலும் நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசத்தினை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையிலேயே குறித்த அதிபர் நியமனம் தற்போது இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இரண்டாம் தவணை ஆரம்பித்த நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாது பாடசாலை முன்பாக பெற்றோர், பழைய மாணவர்களுடன் இணைந்து பேராடி வருகின்றனர். தமக்கு பழைய அதிபர் அல்லது வேறு ஒரு அதிபரை நியமிக்குமாறும் தற்போது நியமிக்கப்பட்டவர் தமக்கு வேண்டாம் எனத் தெரிவித்தே குறித்த போராட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக இன்று காலை 11 மணிவரை செட்டிகுளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் பலவும் பூட்டப்பட்டு தமது ஆதரவை வழங்கியிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா ஆகியோர் நேரில் சென்று சந்தித்ததுடன், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் போராட்டத்தை கைவிட்டு மாணவர்களை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுமாறும் கோரினர். ஆனால் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.