வறட்சியால் வடக்கு, கிழக்கில் சுமார் 600 000 பேர் பாதிப்பு!!

679

வறட்சியான காலநிலையால் நாடு முழுவதும் 9,58,000 ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், வறட்சியினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு பகுதியில் சுமார் 4,50,000 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்

யாழ். குடாவில் வறட்சியின் கொடூரத்தால் தீவுப்பகுதிகளே அதிகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வழமையான நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

பிரதேச செயலகங்களால் குறித்த பகுதிகளில் பவுஸர் மூலம் நாளாந்தம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த போதிலும் தற்போது நீர் வழங்கலிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. குடிநீர் இன்றி கால்நடைகளும் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளதுடன், பயிர்ச்செய்கைகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது.

சிறுபோக விளைச்சலை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகளும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளதுடன், நீரின்றி மரங்களும் வாடி வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலும் குடிநீருக்காக மக்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், வயல் நிலங்களும் காய்ந்து காட்சியளிக்கின்றன.

வவுனியாவிலும் நீரின்றி மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பெருமளவிலான குளங்கள் வற்றியுள்ளதால் கால்நடைகள் குடிநீரின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.

வெப்ப மிகுதியால் மக்கள் அதிக நீராகாரங்களைத் தேடிச்செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விவசாயமும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

அம்பாறை – நாவிதன்வெளி குடியிருப்பு முனை பகுதி மக்கள் தமது இதர தேவைகளுக்காக குளத்தினைப் பயன்படுத்தி வந்த நிலையில், வறட்சி காரணமாக குளம் வற்றியுள்ளமையால் நீரின்றி மக்கள் அல்லலுறுகின்றனர்.

கிணறுகளிலும் நீர் வற்றிவிட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.