பந்துவீச்சில் முன்னேறிவரும் இலங்கை வீரர்கள் : கிரிக்கெட் சபை!!

322

பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடாக பந்துவீசும் 178 வீரர்கள் அடையாளங்காணப்பட்டனர். குறித்த எண்ணிக்கையானது இவ்வருடத்தில் 5 ஆக குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் மதிவாணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வருடத்தில் தேசிய நடுவர்கள் ஊடாக, பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு குறித்த விடயத்தில் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்தமையே சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் சந்தேகத்துக்கிடமாக பந்துவீசும் வீரர்களை பொறுத்தவரையில், 19 வயதுக்குற்பட்ட அணியிலிருந்து வீரரொருவர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 13 வயதுக்குற்பட்டோர் அணியிலிருந்து நால்வர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் 17 மற்றும் 15 வயதுக்குற்பட்டோர் அணியிலிருந்து சந்தேகத்துக்கிடமாக பந்துவீசும் வீரர்கள் அடையாளங்காணப்படவில்லை.

இதேவேளை கழகங்களுக்காக விளையாடும் 6 வீரர்கள் சந்தேகத்துக்கிடமாக பந்துவீசுவது கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்கள் முன்னாள் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரவீந்திர புஷ்பகுமாரவிடம் பயிற்சியை பெற்று, பந்துவீச்சில் மாற்றங்களை ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.