மனிதர்கள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அபாயங்களில் இருந்து தப்பித்து உயிர்வாழ வேண்டுமானால், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேறி வேறொரு கிரகத்திற்கு சென்று குடியேற வேண்டுமென விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள் அதிகரிப்பு, மக்கட்தொகைப் பெருக்கம் போன்றவை உள்ளிட்ட காரணங்களால் பூமி மிகத் தீவிரமாக ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மூத்த விஞ்ஞானியும் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங், உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், பிபிசி சேவைக்கான ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ள ஹாக்கிங், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, மனிதர்கள் வேறு கிரகத்தில் வாழ்வது சாத்தியமா என்பது குறித்து ஹாக்கிங் மற்றும் அவரது முன்னாள் மாணவர் கிரிஸ்டோஃபே கல்ஃபர்ட் விண்வெளிக்குப் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






