மணமகனுக்கு வைக்கப்பட்ட எழுத்து பரீட்சையில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் மணமகள் கல்யாணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்திய உத்தர பிரதேச மாநிலம் மணிப்பூரி கிராமத்தில் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் மாப்பிள்ளை 10ஆம் வகுப்பு வரையில் படித்தவர். ஆனால், கல்யாணப் பொண்ணு வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால் மாப்பிள்ளை வீட்டு அதிகாரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துள்ளது.
அதே அதிகாரத்துடன் மணமகளுக்கு எழுத படிக்க வருமா என மணமகன் ஒரு சின்ன ஹிந்தி பரீட்சையொன்றை நடத்தியுள்ளார். இதில், நூற்றுக்கு நூறு பெற்று மணமகள் சித்தியடைந்துள்ளார். இதனையடுத்து மணமகன் திருமணத்துக்கு சம்மதித்துள்ளார்.
அடுத்து இதே பரீட்சையை மணமகனுக்கும் நடத்த வேண்டுமென மணப்பெண் கூறியுள்ளார். இதற்கு மணமகன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் ஐந்தே ஐந்து வார்த்தைகளுக்கு எழுத்து பரீட்சை வைத்துள்ளார் மணமகள். அதில் சித்திபெற்று கூடிய மதிப்பெண்ணை பெற்று விடுவார் என சுற்றமும் நட்பும் காத்திருந்தனர்.
ஆனால், திருமண வீட்டார் சற்றும் எதிர்பார்க்காதவாறு மாப்பிள்ளை எடுத்த மதிப்பெண் என்ன ‘பூஜ்ஜியம்’. இதனையடுத்து, உடனே கல்யாணத்தை நிறுத்துமாறு மணமகள் தெரிவித்துள்ளார். இரு வீட்டாரும் எவ்வளவோ சமாதானங்கள் கூறினாலும், குறித்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து மணமகள் வெளியேறியுள்ளார்.






