அவசர அழைப்பையடுத்து திருடனை பிடிக்கச் சென்ற பொலிஸார் உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.
டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக சென்ற பொலிஸ் ரோந்து காருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசிய சிறுவன் ஒரு விலாசத்தை குறிப்பிட்டு மேற்கண்ட விலாசத்தில் அவசரம் உடனடியாக உதவி தேவை என்று கூறினான்.
ஏதோ திருட்டு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என யூகித்துக்கொண்டு உருவிய துப்பாக்கியுடன் அந்த விலாசத்தில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ்காரர் ஜீன் கிம்ப்டன் என்பவரை வரவேற்ற ஒரு சிறுவனை அவரை வீட்டின் உட்புறத்தில் இருந்த குளியலறைக்கு அழைத்து சென்றான்.
உள்ளே குழந்தையின் தலை பாதி வெளியேறிய நிலையில் அந்த சிறுவனின் தாயார் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
சற்றும் தயங்காமல் தனது கைகளில் உறைகளை மாட்டிக்கொண்ட ஜீன் கிம்ப்டன், அந்த பெண்ணுக்கு தைரியம் கூறி, தாயையும் சேயையும் பிரித்தெடுத்தார்.
பின்னர் அம்புலன்சை வரவழைத்த அவர் பிரசவித்த பெண்ணையும், பிறந்த ஆண் குழந்தையையும் கரோல்டனில் உள்ள பேய்லர் வைத்தியசாலையில் அனுமதிக்க உதவினார்.
இச்சம்பவம் தொடர்பாக புல்லரிப்புடன் பேட்டியளித்த ஜீன் கிம்ப்டன், அவசரம் என்று அந்த சிறுவன் போன் செய்ததும் ஒரு திருடனை பிடிக்கப் போகிறோம் என்ற சுதாரிப்புடன் நான் துப்பாக்கியுடன் அந்த வீட்டினுள் நுழைந்தேன். ஆனால், இந்த பூமிக்கு ஒரு புதிய உயிரை அறிமுகப்படுத்திய பணியில் எனது பங்கும் உண்டு என்பதை எண்ணி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன் என்றார்.