வேலூர் அருகே கார் விபத்தில் தொலைக்காட்சி நடிகை சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் தொலைக்காட்சி துணை நடிகையாக நடித்து வந்தார்.சென்னைஸ் அமிர்தா உள்ளிட்ட பல விளம்பர படங்களில் நடித்து உள்ளார். தொலைக்காட்சி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மொடலாகவும் இருந்தார்.தற்போது தமிழில் ருத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் இன்னும் வெளியாகவில்லை.
இவர், சென்னையில் படப்பிடிப்பிற்கு சென்று விட்டு நேற்றிரவு காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். நடிகை ரேகா சிந்துவுடன், பெங்களூருவை சேர்ந்த அவரது தோழி ரட்சினி (21) மற்றும் ஜெயக்குமரன் (20) ஆகிய 2 பேரும் பயணித்தனர்.காரை அபிஷேக் குமரன் (22) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சுண்ணாம்பு குட்டை என்ற பகுதியை கடந்து சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ரேகா சிந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஓட்டுநர் அபிஷேக் குமரன் உட்பட மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலியான ரேகா சிந்துவின் உடலையும் மீட்டு திருப்பத்தூர் அரசு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். விபத்தில் தொலைக்காட்சி நடிகை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.