ஸ்மார்ட்போன், டேப்லட் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை குழந்தைகள் பயன்படுத்த அனுமதித்தால் அவர்களின் பேசும் திறன் தாமதமாகலாம் என கனடா விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
டொரோண்டோ நகரில் 2011-2015 இடைப்பட்ட காலத்தில் ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையான 894 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒன்றரை வயதின் போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தினமும் சராசரியாக 28 நிமிடங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்திய குழந்தைகளின் பேசும் திறன் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது.
அதன்படி, ஒவ்வொரு 30 நிமிடமும் அதிகமாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த பாதிப்பு ஏற்பட 49 சதவீதம் அதிக வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளின் சமூகத்துடனான தொடர்பு, அவர்களின் உடல்மொழி ஆகியவற்றில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை.
குழந்தைகளிடம் தற்போது மின்னணுப் பொருட்கள் பயன்பாடு வெகு சகஜமாக உள்ளது. அவர்கள் அதனை அளவோடு பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, 18 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொடுதிரை சாதனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கக்கூடாது என அமெரிக்க சிசு சுகாதார இயல் மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.