முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட படுக்கை மெத்தைகள் வழங்கிவைப்பு!!

631

 
இறுதிப் போரின்போது காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டநிலையில் படுக்கையில் இருக்கும் நோயளிகளுக்கு விசேட காற்று நிரப்பும் படுக்கை மெத்தைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைபெறும் பயனாளிகளுக்கே இந்த விசேட படுக்கை மெத்தைகள் இன்று (08.05.2017) வழங்கிவைக்கப்பட்டன.

மோட்டிவேசன் லங்கா நிறுவனத்தினால் 10 நோயாளர்களுக்கு இந்த விசேட படுக்கை மெத்தைகள் வழங்கிவைக்கப்பட்டன
.
இந்த நிகழ்வில் மோட்டிவேசன் லங்கா நிறுவனத்தின் வைகறை நிலைய பொறுப்பாளர் முகுந்தன், சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பொருளாளர் ஜனார்த்தனன் மற்றும் நடமாடும் மருத்துவ சேவை திட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் இந்த திட்டத்திற்கு கனடிய தமிழர் தேசிய அவை எனும் புலம்பெயர் அமைப்பு நிதியுதவி வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.