ஒரு சாமானியன் பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த அதிபரானது எவ்வாறு?

1496

இமானுவல் மக்ரோன் 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர். பிரான்ஸ் சார்பாக உலக அரங்கில் இவரது செயற்பாடுகள் கவனம் ஈர்த்துள்ளன. இத்தனைக்கும் இம்மானுவல், பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரிய, பெரிய தேசியக் கட்சிகளின் வலிமையான பின்புலங்களைக் கொண்டவரல்ல.

பிரான்ஸ் அரசாங்கத்தில் சிவில் அதிகாரியாக தன் பணியைத் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக பல மில்லியன் டொலர்கள் வர்த்தகம் நடக்கும் வங்கியொன்றின் முதலீட்டு வங்கியாளராக மாறி அங்கிருந்து பிரான்ஸின் பொருளாதார அமைச்சராகி இன்று அதிபராகிவிட்டார்.

பிரெஞ்சு அரசியல் களத்தில் நடுநிலைவாதியான மக்ரோனை நான்கு வருடங்களுக்கு முன்பு வரை பிரான்ஸ் மக்களுக்கு யாரென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்றோ பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த, உலகின் இளமையான அதிபர்களில் ஒருவராகி இருக்கிறார்.

தேர்தலின் போது எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கூறியவாறு, மக்ரோனுக்கு எந்த விதமான அரசியல் முன் அனுபவங்களோ, பயிற்சிகளோ கிடையாது. மரபார்ந்த புகழ்மிக்க பிரான்ஸ் தேசிய கட்சிகளின் பின்புலமும் இல்லை. இதற்கு முன்பு இவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவும் பிரான்ஸில் தேர்தல்கள் எதுவொன்றிலும் கலந்து கொண்டதே இல்லை.

இவருக்கென ஓட்டு வங்கியும் கிடையாது. ஆனால் திடீரென பிரான்ஸ் நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு, மக்கள் நலனுக்காக பல திட்டங்களை முன்னிறுத்தி, ”என் மார்ச்” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவரின் திட்டங்கள் அனைத்தும் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அவை மக்களுக்குப் பிடித்தமானவையாக, மக்களது நலன் நாடும் திட்டங்களாக அமைந்ததால் அவருக்கு கிடைத்த ஏகோபித்த மக்கள் ஆதரவில் இன்று அவர் பிரான்ஸின் அதிபராகி இருக்கிறார்.

39 வயதான இம்மானுவல் மக்ரோன் மணந்து கொண்டது தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிகிட் ட்ரோனியக்ஸை. முன்னாள் ஆசிரியையான பிரிகிட் மக்ரோனைச் சந்திக்கும் போது அவருக்கு வயது 15. திருமண வயது வரும் வரைக்குமான மூன்று ஆண்டுகள் காத்திருந்து மக்ரோனுக்கு 18 வயதானதும் இருவரும் மணம் செய்து கொண்டனராம். தனது மனைவி குறித்துப் பேசும் போது தேர்தல் நேரத்தில் தனது பிரசார உரைகளைத் தயாரித்து உதவியதில் பெரும்பான்மையான பங்கு மனைவிக்கே இருப்பதாக மக்ரோன் குறிப்பிட்டார்.

ஒரு சிவில் சேவையாளராக இருந்து, சடாரென பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்வானது மக்ரோனின் அரசியல் கவர்ச்சிகளில் ஒன்று. திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போலவே ஒரு சாமனியன் அதிபராவதை பிரான்ஸ் மக்களும் விரும்பினர். ஏனெனில், மக்ரோன் தனது பிரசார உத்திகளில் முன் வைத்தது பெரும்பாலும் முரட்டுத்தனமான ஃப்ரெஞ்சு அரசியல் கொள்கைகளுக்கு எதிரான வாதங்களையே. எனவே, தான் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பொருளாதார அமைச்சராக அனுபவம் பெற்று, பெரிதாக ஃப்ரெஞ்சு அரசியலில் அறிமுகமற்றிருந்த போதிலும், மக்ரோன் மக்களின் நம்பிக்கையை வென்று அதிபராகி இருக்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை 7% க்கும் குறைவாகக் குறைப்பது அவரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. முந்தைய பிரான்ஸ் அதிபரான ஃப்ரங்கோயிஸ் ஹோலண்ட் தோல்வி கண்ட விவகாரம் இது. ஐரோப்பியச் சந்தையில் பிரான்ஸ் இழந்த இடத்தை மீண்டும் உருவாக்கி, பிரான்ஸை மட்டுமே மையப்படுத்தும் ஒற்றைச்சந்தை முறையை உருவாக்குவதே தனது லட்சியமாக மக்ரோன் அறிவித்துள்ளார்.

மக்ரோன் பொருளாதார ரீதியாக தாராளவாதத் தன்மை கொண்டவராக தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டுள்ளார். சார்புடைய அல்லது சார்பற்ற என எந்த மாதிரியாக இருந்தாலும் பொருளாதாரப் பிரச்சினைகளில் தாராளவாதத் தன்மையைப் பின்பற்றினாலும் சமூகப் பிரச்சினைகளில் இடது சார்புடையவராகவும் மதச்சார்பற்ற பிரான்ஸ் தேசத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் அனுமதி அளித்து, சமத்துவம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் முற்போக்குத் தன்மையைக் கடைப்பிடிக்கும் மக்கள் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதுவே அவரது வெற்றிக்கான காரணமாகக் கூட இருக்கலாம்.

அதுமட்டுமல்ல, மக்ரோன் 120,000 பொதுத்துறை வேலைகளைக் குறைக்க விரும்புகிறார், பொது செலவீனங்களை 60 பில்லியன் யூரோக்கள் (65 பில்லியன் டொலர்) ஆகவும் குறைக்க விரும்புகிறார், மேலும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார். அதோடு மட்டுமல்ல; தோல்வியுற்ற மற்றும் வீணான பிரெஞ்சு அரசியல் அமைப்புகளை மாற்றுதல், தொழிலாளர் சட்டங்களை நிதானப்படுத்துதல், சமூக இயக்கத்தை ஊக்குவித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் ஒரு யூரோ அரசாங்கத்தை ஸ்தாபித்தல் ஆகியவையும் மக்ரோனின் அரசியல் வியூகங்களில் அடங்கும்.

ஃப்ரெஞ்சுப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸின் சார்பாக ஒலிக்கும் குரல்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான வணிக நட்பு நடவடிக்கைகளை மக்ரோன் தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருப்பதை ஆரோக்கியமானதாக ஃப்ரெஞ்சு மக்கள் கருதுகின்றனர்.

தனது பரந்த வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும், ரஷ்யா, ஈரான், துருக்கி மற்றும் சவுதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்திக்கொண்டு, சிரியா மற்றும் வேறு இடங்களில் நீடிக்கும் போர் விவகாரங்களை முடிவுக்குக்கொண்டு வரத்தக்க அரசியல் தீர்வைக் கொண்டு செயலாற்றுவதற்கு உறுதியளிப்பதாகக் கூறும் மக்ரோன், உலக நாடுகளிடையே பிரான்ஸ் அதிபராகத் தனது செயற்பாடுகளில் ஒரு இராஜதந்திர தொனியை பின்பற்றுகிறார்.

மக்ரோன் டிசம்பர் 21, 1977 அன்று பிரான்ஸின் வடக்கு நகரமான அமியென்ஸில் ஃபிராங்வா நோஜூஸ் என்ற மருத்துவர் மற்றும் நரம்பியல் பேராசிரியரான ஜீன்-மைக்கேல் மக்ரோன் ஆகியோருக