புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேஸ்புக் ஊடாக பணம் கொள்ளையடித்த பெண்!!

275

தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரிடம் பெண் ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய பெண் ஒருவரே இவ்வாறு மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பேஸ்புக் ஊடாக முறைப்பாட்டாளர், எக்பல் சால்ஸ் என்ற பெண்ணுடன் அறிமுகமாகி நட்புறவு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

தனது கணவர் சிரியா யுத்தத்தில் உயிரிழந்ததாகவும், அவருக்கு சொந்தமாக 9.4 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பணம் உள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தில் 65 வீதத்தை நல்ல விடயங்களுக்காக பயன்படுத்தவுள்ளதாகவும், மிகுதி 35 வீதத்தை தனக்கு என்றும் 5 வீதத்தை செலவிற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் குறித்த பெண் முறைப்பாட்டாளரிடம் கூறியுள்ளார்.

தான் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மரணிக்கும் நிலையில் உள்ளதனால் அந்த பணத்தை ரோயல் ஸ்கொட்லேன்ட் வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்காக 1200 அமெரிக்க டொலர் பணத்தை தான் வழங்கும் வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறும் குறித்த பெண் முறைப்பாட்டாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முறைப்பாட்டாளர் குறித்த பணத்தை வைப்பு செய்த போதிலும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுவான ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த ஜனக பிராஷாந்த என்பவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளராவார்.

பணம் வைப்பு செய்த வங்கி மற்றும் அந்த பணத்தை பெற்றுக் கொண்ட நபர் தொடர்பில் சீ.சீ.டீ.வி காணொளி ஊடாக விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.

அதற்கு அனுமதி வழங்கிய நீதவான் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.