மற்றுமொரு சைபர் தாக்குதல் : அவதானத்துடன் இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை!!

245

மற்றுமொரு சைபர் தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ரன்சம்வேர் வைரஸ் மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன, இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸ் தாக்குதலை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்னுமொரு சைபர் தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறலாம் என அவர்கள் யூகிக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை பெருமளவு சீர்செய்யப்பட்டுள்ளது எனினும் கணணி வைரஸிற்கு எதிராக மேலும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இப்படி ஒரு சைபர் தாக்குதல் நடந்தது இல்லை என்று யூரோபோல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.