ஒரே ஒரு புகைப்படத்தால் முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு கிடைத்த உதவி!!

565

மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மகனை மடியில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சயீத்- யாசிம் தம்பதியினருக்கு 1 மகனும், 3 மாத குழந்தையும் உள்ளது. இளம் வயது யாசீமை பக்கவாதம் தாக்கியதால் அவரால் தனது பச்சிளம் குழந்தையை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை.

இந்தத் தம்பதிக்கு உறவினர்களும் கிடையாது. ஆட்டோ ஓட்டினால்தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும். மீண்டும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம்.

மூன்று மாதக் குழந்தையைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துக்கொள்ள, மகனை என்ன செய்வது எனத் தெரியவில்லை.

சரி… நம்முடனே இருக்கட்டும் என வைத்துக்கொண்டார். வாடிக்கையாளர்கள் வந்தால், மகனை முன் இருக்கையில் தன்னுடன் வைத்துக்கொள்வார். சிறுவன் என்பதால் அடிக்கடி உறங்கிவிடுவான்.

அப்போது முன் இருக்கையில் மகனை மடியில் கிடத்தியவாறே ஆட்டோ ஓட்டுவதை முகமது சயீத் வழக்கமாக வைத்திருந்தார்.

இதனை அந்த ஆட்டோவில் பயணம் செய்த வினோத் என்பவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சயீத்தின் தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வினோத் வெளியிட்டதால், சயீத்தின் மனைவிக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்துள்ளன.