உலகெங்கும் இளம் வயதினர் உயிரிழப்பு : முக்கிய காரணங்களை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு!!

286

உலகெங்கும் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது வீதி விபத்துகளே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற வகையில், ஆண்டுக்கு 12 இலட்சம் பேர் வீதி விபத்துக்களால் தங்கள் இன்னுயிரை இழப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2015 இல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் வீதி விபத்துக்கள், சுவாச நோய்த்தொற்றுகள், தற்கொலை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.

2015 இல் 10-19 வயதினர் பிரிவில் வீதி விபத்தால் ஏற்பட்ட காயங்கள் மூலம் 1,15,302 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவாசத் தொற்றுப் பிரச்சினையால் 72,655 பேரும் தற்கொலையால் 67,149 பேரும் வயிறு சம்மந்தமான உபாதைகளால் 63,575 பேரும் தண்ணீரில் மூழ்கி 57,125 பேரும் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்களில் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான விபத்துக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளான ஆப்பிரிக்கா மற்றும் தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

எச்.ஐ.வி, எய்ட்ஸ், மூளைக்காய்ச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்த்தொற்று காரணமாகவே பெரும்பாலான இளம் வயதினர் ஆப்பிரிக்க நாடுகளில் உயிரிழந்துள்னர்.

19 வயதுடைய பெண்கள் பலர் மகப்பேறு சிக்கல்களால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.