உலகளாவிய ரீதியில் இடம்பெறும் சைபர் தாக்குதல் மூலம் இலங்கையின் நிறுவனமொன்றும் பாதிப்பு!!

334

ரன்சம்வேர் இணைய தாக்குதலால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ரன்சம்வேர் என்ற ஒரு வகை வைரஸ் தாக்கியது.

இ-மெயில்கள் மூலம் நடந்த இந்த சைபர் தாக்குதலால் கணனிகள் முடங்கின இது உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது.

அதன்படி சீனாவின் மிகப்பெரிய எரிசக்தி விநியோக நிறுவனமான பெற்றோசீனா, தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பெற்றோல் நிறுவனங்களின் நிதி கட்டமைப்பு முடங்கியதாக அறிவித்துள்ளது.

நாட்டின் பொலிஸ், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் இந்த தாக்குதலால் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பானின் ஹிட்டாச்சி தொழிற்சாலை, சில மருத்துவமனைகள் இந்த சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல இந்தோனேஷியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனையில் கணனிகள் முடங்கியதால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தென்கொரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் இணையதளம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறு இந்த சைபர் தாக்குதல் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் சர்வதேச வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பிரித்தானிய தேசிய சுகாதார சேவை உட்பட உலகில் உள்ள பிற நிறுவனங்கள் மீதான இந்த இணைய தாக்குதல் மூலம் இலங்கையின் நிறுவனமொன்றும் பாதிக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.

கணினியொன்றில் ரன்சம்வேர் இணையத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கணினியில் காணப்பட்ட தரவுகளின் பிரதிகள் குறித்த நிறுவனத்தினால் ஏற்கனவெ பராமரிக்கப்பட்டதால், பாரியளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.