200வது டெஸ்ட்டுடன் சச்சின் ஓய்வு பெற பிசிசிஐ அறிவுரை!!

309

tendulkar

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது சச்சின் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 198 டெஸ்டில் ஆடியுள்ள இவர், மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரில் 200வது டெஸ்டில் விளையாடி புதிய வரலாற்றை படைப்பார்.

200வது டெஸ்டோடு சச்சின் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சச்சின் ஓய்வு பற்றி வாய் திறக்கவில்லை. 200வது டெஸ்டுக்கு பின்பு அவர் தொடர்ந்து விளையாடும் எண்ணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 200வது டெஸ்ட் போட்டியோடு சச்சினை ஓய்வு பெறுமாறு கிரிக்கெட் சபை வலியுறுத்தும் என்று ஆங்கில முன்னணி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் சபையின் மூத்த நிர்வாகி ஒருவர் சச்சினை அணுகி ஒய்வுபெறுமாறு வலியுறுத்துவார் என்றும் அவரிடம் இந்த தகவலை சொல்பவர் பெயர் விவரம் பகிரங்கமாக வெளியிடப்பட வில்லை என்றும் இது உறுதியான தகவல் எனவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

சச்சினின் ஆட்டம் தற்போது மிகவும் சிறப்பாக இல்லை என்று கிரிக்கெட் சபை கருதுகிறது. இதனால் தான் 200வது டெஸ்டோடு அவர் ஓய்வு பெறுவதில் தீவிரமாக உள்ளது.

சச்சின் கடைசியாக 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவுக்கெதிராக கேப்டவுன் டெஸ்டில் சதம் (146 ஓட்டங்கள்) அடித்தார். அதன்பிறகு அவர் 22 டெஸ்ட் விளையாடியும் சதம் அடிக்கவில்லை. கடந்த 12 டெஸ்டில் இரண்டு அரை சதமே அடித்துள்ளார்.

சச்சின் 198 டெஸ்டில் 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 248 ஓட்டங்கள் ஆகும். 51 சதமும், 67 அரை சதமும் அடித்துள்ளார்.