கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் நடவடிக்கை தொடர்கின்றது!!

707

வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ‘எக்சலன்ஸி ‘ என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ், கட்டட ஆய்வு மையம், பிரதேச செயலகம் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இருவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டநிலையில் இன்றும் தொடர்கிறது.

நேற்று முன் தினம் சம்பவம் இடம்பெற்றபோது காணாமல்போனதாக கருதப்பட்ட இருவர் உயிருடன் வெளியில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேலை செய்தவர்களின் தகவல்களுக்கு அமைய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக நம்பும் பொலிஸார், இராணுவம், விமானப்படை, விஷேட அதிரடிப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவற்றின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கட்டிட இடிந்து விழுந்த அனர்த்ததில் சிக்கி உயிரிழந்தவர் கட்டிட கட்டுமான பணிக்காக அங்கு வந்த ஊழியர் என பொஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. ஹசலக – கொலன்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ரத்நாயக்க முதியன்சலாகே சம்பத் உதய குமார ரத்நாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

119 இற்கு அழைப்பு எடுத்த நபர்

சுமார் 8 மணி நேரத்தின் பின்னர் குறித்த நபர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கொழும்ப்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் அங்கு உயிரிழந்தார். குறித்த நபர் உள்ளே இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த போது 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைத்து தான் சிக்குண்டுள்ளதை அறிவித்த நிலையிலேயே பொலிஸார் அவரது தொலைபேசி உரையாடலுக்கு அமைவாக அவர் இருந்த பகுதியை இராணுவத்தினருடன் இணைந்து உடன் அப்புறப்படுத்தி அவரை மீட்டிருந்தனர். எனினும் அவர் பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கட்டிடத்தின் பின் பகுதியே இடிந்து சரிந்துள்ள நிலையில் நான்கு பாரிய கொங்கிறீட் திட்டுக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்பது பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நான்கு பாரிய கொங்றீட் திட்டுக்களும் ஏனைய உடைந்த சேதங்களுக்கு மத்தியில் உள்ள நிலையில் அதனுள் சிக்கி இருப்பதாக நம்பப்படும் இருவரையும் உயிருடன் மீட்க முடியுமா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் முற்பகல் சம்பவம் இடம்பெற்றது முதல் இரவு 11.00 மணி வரை இராணுவத்தினர் தலைமையிலான மீட்புக் குழுவின் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் மீள நேற்று காலை முதல் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தது.

நிலத்தின் கீழ் இரு மாடிகளையும் நிலத்தின் மேல் ஐந்து மாடிகளையும் கொண்ட நிர்மாணப்பணிகள் நிறைவடையாத வரவேற்பு மண்டபமே இவ்வாறு இடிந்து வீழ்ந்து அனர்த்தம் சம்பவித்துள்ளது. மண்டபத்தின் நில மேல் மட்டத்தில் அமைந்துள்ள ஐந்து மாடிகளே இதன் போது இடிபாடுகளுக்கு உள்ளாகி சரிந்துள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு மேலதிகமாக பல இலட்ச ரூபா பெறுமதியான வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.

சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில ஜயமான்ன உள்ளிட்ட குழுவினர் மீட்புப் பணிகளுக்கு இராணுவம்இ விஷேட அதிரடிப்படைஇ தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோரின் உதவியைக் கோரியிருந்த நிலையில் நேற்றும் அவர்களது உதவி பெற்றுக்கொள்ளப்பட்டது..

அதன்படி மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைப்படி பொலிஸாருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருமாக 150 பேர் வரையில் மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளனர். இதனை விட இராணுவத்தின் விஷேட படையணியின் மேல் மாகாண கட்டளை பணியகத்தின் கீழ் உள்ள 14 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 148 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதுடன் மீட்பு நடவடிக்கை தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விமானப்படையின் 22 பேரும் தீயணைப்புப் படையினரும் ஸ்தலத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை 6.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் புதிதாக ஒருவரும் மீட்கப்படாத போதும் ஏற்கனவே நேற்று முன் தினம் காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் களுபோவில – கொழும்பு தெற்கு போதன வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். களு போவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 14 பேரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக அந்த வைத்திய சாலையின் பேச்சாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதனைவிட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 9 பேர் சிகிச்சைப் பெறுவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

இதனிடையே இடிந்து விழுந்த கட்டிடத்தின் நிர்மாணத்திற்காக தேசிய கட்டிட ஆய்வு மையத்தில் நிர்மாண அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என குறித்த மையம் முன்னெடுத்துள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் கட்டிடம் இடிந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய அந்த மையத்தின் விஷேட குழுவொன்று சம்பவ இடத்தில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக நிர்மாண தரம், அதன் பொருட்களின் தரம்இ இடத்தின் தன்மைஇ கட்டிடத்துக்கு அருகில் உள்ள கால் வாயில் இருந்து கட்டிட நிர்மாண தூரம் உள்ளிட்டவை தொடர்பில் அவதானம் செலுத்தி கட்டிட ஆய்வு மையம் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதே வேளை கட்டிட நிர்மாணம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் ஐந்து முதல் 7 மாடிவரை கட்டுவதற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற மிக மெல்லிய கம்பிகள் என கூறப்படுகிறது. எனவே எந்த தர நிர்ணயமும் பேணப்படாது இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனைவிட கட்டுமாண பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர்கள் அல்லர் என ஆரம்பகட்ட விசாரணையில் ஊர்ஜிதமாகியுள்ளது. கட்டுமாண கம்பனிக்கு நிர்மாண வேலைகள் கொடுக்கப்படாது கூலி அடிப்படையில் கட்டுமாண வேலையில் ஈடுபட்ட மேசன்கள் ஊடாக இத்தனை பெரிய கட்டிட்டத்தின் நிர்மாணம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கட்டிடத்தை அமைக்க, நிர்மாண வரைப்படம், சாத்திய வள அறிக்கை உள்ளிட்டவற்றை நகர அபிவிருத்தி அதிகார சபையில் இருந்து பெற்றுக்கொள்ளவில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின்பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காடினார். இந்த நிலையில் கொழும்பு மாநகர சபையில் குறித்த கட்டிடம் தொடர்பில் அனுமதி பெறப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந் நிலையில் இது தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக வெள்ளவத்தை பகுதிக்கு பொறுப்பான தெஹிவளை பிரதேச செயலர் நளினி சுப்ரமணியம் தெரிவித்தார்.

குறித்த கட்டிட அனர்த்தம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில ஜயமான்னஇ ஏனைய விஷேட அறிக்கைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதனை மையப்படுத்தி இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக கேசரிக்கு தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முணசிங்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல்தெனிய ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.