சுவாதி கொலையில் யாருக்கு தொடர்பு : விஸ்வரூபம் எடுக்கும் ராம்குமார் மரணம்!!

268

கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென்பொருள் பொறியாளரான சுவாதி, பட்டப்பகலில் பலரது முன்னிலையில், படுகொலை செய்யப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்ட ராம்குமாரை ஜூலை 1ம் திகதி பொலிசார் கைது செய்தனர்

பின்னர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், செப்டம்பர் 18ம் திகதி சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இச்சம்பவத்தில் மர்மம் இருப்பதாக ராம்குமாரின் பெற்றோரும் வழக்கறிஞரும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. அதனால், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தர வேண்டும்.

ராம்குமாரின் பெற்றோர் கடந்த 7 மாதங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், ராம்குமார் தொடர்பான எந்த ஆவணங்களையும் எங்களுக்குத் தர மறுக்கிறார்கள்.

காவல்துறை மட்டும் அல்லாமல் நீதிமன்றமும் ராம்குமார் குறித்த ஆவணங்களைக் கொடுக்க மறுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திடம்தான் முறையிட வேண்டிய நிலைமை. ஆனால், நீதிமன்றங்கள் எதையோ மறைக்க விரும்புவதால் ஆவணங்களைத் தர மறுக்கின்றன.

அதனால், ராம்குமாரின் பெற்றோர் செங்கோட்டை காவல்நிலையத்துக்குச் சென்று காவல்துறை, நீதித்துறை மீது கொலை வழக்குப் பதிவு செய்யுமாறு புகார் கொடுக்க இருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்த அவர் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்கள். அவரது பாதுகாப்புக்கு நீதிமன்றம்தானே பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும்.

அப்படியானால், சிறைக்குள் அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதிபதிதானே புகார் செய்திருக்க வேண்டும். அப்படி நடக்காதது ஏன்,

சுவாதி கொலை வழக்கின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அதன் பின்னணியில், தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது.

அதனால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். இதில் நீதித்துறைக்கும் தொடர்பு இருப்பதால், சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையைக் கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.