வவுனியா புதிய பேரூந்து நிலைய சர்ச்சைக்கு முடிவு : விரைவில் இணைந்த நேர அட்டவணை!!

608

கடந்த 26 ஆம் திகதி வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 09 ஆவது அமர்வு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. மேற்படி கூட்டம் தொடர்பாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்..

மேற்படி கூட்டத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும்பொருட்டு விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தவருடம் மட்டும் வீதி விபத்துக்களால் ஏறக்குறைய 2900 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 7500 க்கும் மேற்பட்டவர்கள் உடல் அவயவங்களை இழந்துள்ளதாகவும் ஏறக்குறைய 35000 க்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் அதிகமான வீதி விபத்துக்கள் எமது மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாமலும் ஒழுங்குபடுத்தாமலும் விடுவோமெனில் கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் பன்மடங்குகளால் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் மேற்படி விடயங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடந்த 15 ஆம் திகதி பல்வேறு சட்ட ஒழுங்குகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடமாகாணத்திற்குள் சேவை வழங்குகின்ற இலங்கை போக்குவரத்து சபையினருக்கு 40 வீதமும் தனியார் பேருந்துகளுக்கு 60 வீதமும் என்ற வகையில் பேரூந்து சேவைகளை ஒழுங்குசெய்யவும், அதனடிப்படையில் இணைந்த நேர அட்டவணையை தயார்செய்து அமுல்படுத்துவது தொடர்பில் விசேட ஏற்பாடுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவற்றை மீறுகின்ற தரப்பினருக்கு எதிராக 10,000 ரூபாய் தண்டப்பணமும் அல்லது இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கவும் அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்கநேரிடும் என்றும் தெரிவித்தார்.

ஆகவே சம்பந்தப்பட்ட சேவை வழங்குகின்ற இரு தரப்பினரும் வீதிகளில் வருகிற பொதுமக்களது உயிர்களில் அக்கறையுள்ளவர்களாக செயற்படுமாறும், ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்படுகளையும் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு இரண்டாவது தீர்மானமாக வவுனியா மாவட்டத்தில் ஏறக்குறைய 195 மில்லியன் ரூபாய்களில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற புதிய பேரூந்து நிலையத்தை மீள இயங்கவைப்பதுதொடர்பிலும், அதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மேற்படி இரண்டு விடயங்களையும் செயற்படுத்தும்பொருட்டு அமைச்சர் நீதிமன்ற கட்டளையையினை பெறுவதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்புவழங்கி எமது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற மாகாணமாக மாற்றுவதற்கும், அதி உச்ச சிறந்த போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கும் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.