புகலிடக் கோரிக்கையாளராக நியூசிலாந்து சென்று சாதனை படைத்துவரும் இலங்கைத் தமிழர்!!

381

இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்று நியூசிலாந்தில் சாதனை நிலைநாட்டி வரும் இலங்கையர் தொடர்பில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கந்தசுவாமி நல்லதம்பி என்ற இலங்கையரே இவ்வாறு நியூசிலாந்தில் நாளுக்கு நாள் சாதனையை நிலைநாட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகின்றார்.

2013ஆம் ஆண்டு குறித்த இலங்கையர் புகலிடக் கோரிக்கையாளராக நியூசிலாந்து சென்றுள்ளார்.

நியூசிலாந்து சென்ற அவர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு சமையல்களை சமைத்து, அசத்தி சாதனை நிலைநாட்டி வருகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா, மியன்மார், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, புருண்டி, கம்போடியா மற்றும் போலந்து உட்பட 12 நாடுகளின் பழங்குடி சமையல்களை சமைத்தும் இந்த இலங்கையர் அசத்தி வருகின்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான சமையல்களை சமைத்து அசத்தி வருவதால் குறித்த இலங்கையர், செஞ்சிலுவைச் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார்.

தாய்லாந்தில் உள்ள அகதிகள் முகாமில் 6 வருடங்கள் வாழ்ந்து வந்த கந்தசுவாமி நல்லதம்பி,ஆங்கில மொழி கற்பதில் பல போராட்டங்களை சந்தித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு கந்தசுவாமி நல்லதம்பி,நியூசிலாந்திற்கு புகலிடக் கோரிக்கையாளராக சென்றுள்ளார். இது தொடர்பில் குறித்த இலங்கையர் கருத்து தெரிவிக்கையில்,

”என்னுடைய நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. அது எங்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது. எனது தாய் நாட்டிலும் நான் சமையற்காரராக தான் இருந்தேன்.

உணவு மூலம் மக்களை திருப்தி படுத்த நான் விரும்புவேன். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக என்னால் என் தொழிலை திருப்திகரமாக செய்ய முடியவில்லை. இருப்பினும் இங்கு வந்து என்னுடைய தொழிலை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நியூசிலாந்தின் Stokes Valley பகுதியில் சமைக்கும் நான் ரொட்டி, தோசை போன்ற பாரம்பரிய உணவுகளை சமைத்து வருகின்றேன்.

எனது மனைவி, ஜியோகிலத்துடன் எனது வாழ்க்கையை கழித்து வருகின்றேன். அவர் எனக்கு சமைப்பதற்கு உதவி செய்து வருவார். விருஷானி 12 வயது ,ஷிபானிகா 5 வயது பிள்ளைகள் இரண்டு பேர் உள்ளனர்”என்றும் கந்தசுவாமி நல்லதம்பி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த இலங்கையர், நியூசிலாந்தில் தனது வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வருகின்றார்.