வவுனியா புகையிரத நிலைய வீதி புனரமைப்பு மந்தகதியில் நடைபெறுவதால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வவுனியா நகரத்திற்கும் குருமன்காட்டிற்கும் இடையிலான புகையிரத நிலைய வீதி பல வருடங்களுக்கு பின்னர் கடந்த வருடத்தில் இருந்து திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.
இத் திருத்த வேலைகளின் போது வீதியின் இரு மருங்கிலும் வெட்டப்பட்ட கால்வாய்கால் பூரணப்படுத்தப்படாது காணப்படுகின்றது. ஒரு வாரத்திற்குள் வெட்டப்படும் கால்வாய்கள் மூடப்பட்டு பாவனைக்கு விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் சில இடங்களில் இரண்டு மாதங்களுக்கு மேலாக வெட்டப்பட்ட வடிகான்கள், கால்வாய்கள் பூரணப்படுத்தப்படாது காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீதியோரத்தில் அமைந்துள்ள தமது வர்த்தக நிலையங்களுக்கு தமது வாடிக்கையாளர்கள் வர முடியவில்லை எனவும், இதுவரை பூரணப்படுத்தப்படாத வடிகால்களால் 5 வரையான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பல முறை தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.








