வவுனியாவில் நீண்டநாட்கள் வேயப்படாத வீட்டில் தாயும் மகளும்!!

515

 
வவுனியா தோணிக்கல் வள்ளுவர் வீதியில் நீண்ட நாட்கள் வேயப்படாது நீலத்தரப்பால் மூலம் மூடப்பட்ட நிலையில் இருந்த மழைகாலங்களில் நீர் ஒழுக்கினால் பாதிக்கப்பட்ட வீட்டில் 84 வயது தாயும் 58 வயது திருமணம் செய்யாத மகளும் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் அண்மையில் தமது வீட்டை மேய்ந்து தர உதவிசெய்யுமாறு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இவர்களது நிலையை நேரில் சென்று கண்டறிந்து உதவியைப் பெறுவதற்காக எமது முகப்புத்தகம் மூலம் உதவும் உள்ளங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனைக் கண்ட கனடா புன்னகை அமைப்பினர் வழமைபோல் தமது கொடையாளர்களின் கவனத்திற்கு இதனைக்கொண்டு வந்து உதவி பெற்றுத்தந்தனர்.

நேற்று (02.06.2017) வெள்ளிக்கிழமை குறித்த வீட்டிற்குச் சென்று பிலிப்பையா இராஜபூபதி என்ற அந்த அம்மாவிற்கு வீடு மேய்வதற்கான ஒரு தொகை பணம் கையளிக்கப்பட்டது.

இவர்கள் வளவில் விளையும் பொருட்களை விற்று சீவியம் நடத்தி வருகின்றனர். சிற்றுண்டிகள் செய்து விற்றல் நிறுவனங்களில் சமையல் உதவியாளராக பணியாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் இலங்கை புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் ஆகியோர் நேரில் சென்று உதவியுள்ளனர்.